Saturday, September 10, 2011

அவனுக்கென்ன...

சற்று  தொலைவில்
காணல் நீர் 
என் கால்களோ
புதை மணலில்.
தொண்டைக்குழியின் 
கடைசி சொட்டு
ஈரத்தையும் உறுஞ்சுகிறது
கருணையற்ற  சூரியன்.
தீப்பெட்டி இரவல் 
வழிப்போக்கனிடம்
எப்படி சொல்வேன் 
என் கண்ணீர்
பெட்ரோலைவிட 
அபாயகரமானது என்று.
மேலும்
புகை பிடிக்கும் பழக்கம் 
இல்லையென்று
Monday, September 5, 2011

மொழி புரியாத கடவுளை கெட்ட வார்த்தைகளால் திட்டலாம்


யாரையும் காதலிக்காதவர்களுக்கு 
யாராலும் காதலிக்கப்படாதவன்
எழுதும் கடிதம் இது.

காதலில் 
வெறும் பார்வையாளனாய் 
இருப்பதின் 
அவஸ்தைகளை சொல்கிறேன் 
பங்கேற்ப்பாளனாய் இருக்கும் 
அதிர்ஷ்டம் வாய்த்ததில்லை எனக்கு.

எனது இரு சக்கர வாகனத்தின் 
பின் இருக்கையில் 
வழித்துணையாய் கூட 
யாரும் வந்ததில்லை.

எனது சாலைகள் 
இன்னும் முடிவுற வில்லை 

எனது பரிசுத்தமான அன்பு 
பரிமாறப்படாமல் தேங்கி கிடக்கிறது 
 
எனது அன்பின் கணத்தை தாங்க
யாருக்கும் திராணியில்லை .

அதீத ஒழுக்கம் கொண்டவனின் 
உறுதியை சோதிக்கும் 
கடவுள் கூட சற்று
களைத்துப் போகிறான்  

எதையும் உண்பதற்கு 
தடை செய்து விட்டு 
பசியை மட்டும் தூண்டுகிறான் 

பாவி அவன் 
என்னை படைத்ததற்காக 
மன்னிப்பு கேட்கிறான் 

நான்
மன்னிக்க தயாராக இல்லை 

எனது சவப்பெட்டியின் 
மூடியை 
தேடித்தரச்சொல்லுங்கள் 

                                              சிராஜ் 

Wednesday, July 6, 2011

நிகழாத குற்றம்

எடை கற்களாய் 
உன் இதயம் 
எடை பொருளாய் 
என் இதயம் 
நடுவில் 
தராசு முள்ளாய்
துடிக்குதடி
நம் காதல்.

எடை கற்களின் 
கையில்தான் உள்ளது 
எடைபடும் பொருளின் மதிப்பு .

நம்
வாழ்க்கைத் தராசு
உன் கையில்

நிகழாத ஒரு குற்றத்தை 
நிருபிக்கவேண்டியவள் நீ 

எந்த தண்டனைக்கும் 
தயாராக இருக்கும்
நான் 
யார் என்பதை
சொல்லவேன்டியவளும்  நீ 

தராசின் பாரம்  
தாங்க முடியவில்லை 
என்பதற்காக 
நீதியை தள்ளி வைக்காதே 

குற்றம் செய்தால்தான்
நீதிதேவதையை
நேரில் பார்க்க முடியுமென்றால் 
எந்த மாதிரியான குற்றத்தை 
எதிர்ப்பார்க்கிறாய்
 
                     ----சிராஜ் 

Wednesday, May 25, 2011

அதே மாதிரி

புதிது  போல 
தோன்றி 
வழக்கம் போலவே 
முடிகின்றது 
ஒவ்வொரு நாளும் .

அதே சூரியன் 
அதே நிலா 
அதே மேகம் 
அதே பாதை
அதே பயணம் 

நம்பி 
ஆக வேண்டிய கட்டாயம் 
துரோகம்
செய்தே  தீர வேண்டிய சூழல் 
 
அவரவர் வாழ்க்கை 
அவரவர்க்கு

ஆனாலும் 
அதே மாதிரி தான்
இருக்கிறது வாழ்க்கை 
முன் 
எது மாதிரி இருந்ததோ 
அது மாதிரி.

Friday, January 21, 2011

குறையொன்றுமில்லை

ஒவ்வொரு வருடத்திலும்
நீ  பிறந்த மாதம் .
ஒவ்வொரு மாதத்திலும்
நீ பிறந்த வாரம்.
ஒவ்வொரு வாரத்திலும்

நீ பிறந்த கிழமை.
ஒவ்வொரு கிழமையுலும்
நீ பிறந்த நேரம்.
ஒவ்வொரு நேரத்திலும்
நீ பிறந்த நிமிடம்
ஒவ்வொரு நிமிடத்திலும்
நீ பிறந்த நொடி
ஒவ்வொரு நொடியுலும்
நீ பிறந்த கணம்.
இப்படி நான் கொண்டாட
கணங்கள் இருக்க
உன் பிறந்த நாள்தான்
மறந்துவிட்டது.
பிறகு ஒருநாள்
நீ யாரென்பதும்.


Monday, January 3, 2011

கடிதம்

      எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மனுஷ்யபுத்திரனின் "இதற்கு  முன்பும் இதற்குப் பிறகும்" கவிதை நூல் வெளியிட்டு விழாவிற்கு ஒரு பார்வையாளனாய்  போயிருந்தேன். அது பற்றிய விபரங்கள் அறிய உயிரோசை இணைய வார இதழை பார்க்கவும்.

Thursday, December 2, 2010

வாழ்த்துகிறேன்

உனக்கு வாழ்த்துச் சொல்ல
நான் வலுவானவனுமில்லை
உன்னை ஆசீர்வதிக்க
நான் வரம் வாங்கி வந்தவனுமில்லை

        காரணங்கள் மறந்து போய்
        கடைசியில் பிரிவு மட்டுமே
        நிரந்தரமாகிப் போகும் - சில
        அண்ணன்-தம்பி உறவைப் போல
        நம் நட்பை மாற்றிட
        நினைக்கிறாய் நீ..,

யாரோடும் எனக்கு கோபமுமில்லை
யார் மீதும் எனக்கு வருத்தமுமில்லை

        உனக்கு தெரியும்
        மலர்ந்தால் ரோஜாவாய்  சிரிக்கும்
        கசக்கினால் அத்தராய் மணக்கும்
        நம் நட்பு

எந்த தேவதூதர்களோடும்
நான் தேநீர் குடித்ததில்லை
எல்லா சாத்தான்களோடும்
சாராயம் குடித்திருக்கிறேன்

        சில நேரங்களில்
       அதிகம் பேசிவிடுகிறேன்
       அது என் பலவீனம்
       சில நேரங்களில்
       குறைவாகவே பேசுகிறேன்
       அது என் சாதூர்யம்
       மிக அரிதாகவே வாய்க்கிறது
       சில தருணங்கள்
       மௌனமாக இருப்பதற்கு

கடவுளை சபிக்க
நான் கொடூரமனவனுமில்லை
கடவுளிடம் கையேந்த
நான் கோழையுமில்லை

       ஆணையிடுகிறேன் ஆண்டவனுக்கு
       அவன் (பிறந்த நாள் )
       ஆசி வழங்குவான்  உனக்கு
  
                                     நண்பன் கார்த்திக்கு
                                      சிநேகமுடன்  சிராஜ்